பனிமழை
"இது சீனா ஜப்பானால் ஆக்கிரமிக்கப்பட்ட காலப்பகுதியில் சீன மொழியில் வெளிவந்த கவிதை ஆகும்.அதன் தமிழ்வடிவம் இதுவாகும்."
குளிர், சீனாவைச் சூழ்கிறது...
துயர் நிறைந்த கிழவி போல்
காற்று
நெருக்கமாய்ப் பின் தொடர்கிறது
நீட்டிய அவளது நகங்கள் கடந்து செல்லும் மக்களின்
உடைகளைப் பலமாய் இழுக்கின்றன.
பூமியைப் போல்
பழைமையான அவளது சொற்கள்
இடை விடாது முறையிடுகின்றன
காட்டினில் இருந்து
தம் வண்டிகளை ஓட்டியபடி,
சீனாவின் விவசாயிகள்
வருகின்றனர்.
உரோமத் தொப்பிகளை அணிந்தபடி
பனிமழையை எதிர்த்தபடி,
அவர்கள் எங்குசெல்ல விரும்புகின்றனர்?
உனக்குச் சொல்கிறேன்
நான்கூட
விவசாயப் பரம்பரைதான்.
துயரங்கள் ஆழமாய்க்
கோடிட்டுச் செதுக்கிய உன் முகத்திலிருந்து,
சமவெளியில் வசித்த
மக்களின்,
கொடிய ஆண்டுகளை
எனக்குப் புரிகிறது
மிக ஆழமாய்
எனக்குப் புரிகிறது.
இல்லை,
உன்னைவிட நான் மகிழ்ச்சியாய் இல்லை.
காலநதியில் மிதந்த என்னை
துயரஅலைகள் அடிக்கடி
முழுமையாயே அமிழ்த்தின.
அலைதலிலும்
சிறை அறைகளிலும்,
பெறுமதியான என் இளமை கழிந்தது.
எனது வாழ்வும்
உனது போலவே,
உலர்ந்தது.
சீன நிலத்தின்மீது
பனிமழை பெய்கிறது
குளிர்,
சீனாவைச் சூழ்கிறது...
பனியிரவில் ஆற்றோடு
பழசான கறுப்பு வள்ளத்தில்
சிறிய எண்ணெய் விளக்கு
மெதுவாய்,
இழுபட்டுச் செல்கிறது.
தலையைத் தொங்கவிட்டு,
விளக்கைப் பார்த்தபடி,
அங்கு இருப்பது யார்?
ஓ! நீ
குலைந்த தலையோடும்
அழுக்கு முகத்தோடும்
உள்ள இளம் பெண்ணே
பாதுகாப்பான உனது வீடு,
சூடான, மகிழ்ச்சியான உனது கூடு
ஆக்கிரமிப் பாளரால்
எரிக்கப்பட்டதா?
இதுபோன்ற ஓர் இரவில்
உனது கணவனின், பாதுகாப்பை இழந்தாயா?
எதிரிகளின் துப்பாக்கி முனையில்
மரண பயங்கரத்தில்
சித்திரவதை செய்யப்பட்டு
இழிவு படுத்தப் பட்டாயா?
இதுபோன்ற குளிர்ந்த இரவில்
கணக்கற்ற முதிய தாய்மார்,
நாளையின் சக்கரம் தம்மை
எங்கு எடுத்துச் செல்லும்
என்பதறியாது,
தமக்குச் சொந்தமில்லா வீடுகளில்
அந்நியர் போல்
கூனிக்குறுகி,
ஒடுங்கி இருந்தனர்.
சீனாவின் வீதிகள்
மிகக் கரடு முரடாய்...
சேறு நிறைந்ததாய்...
சீன நிலத்தின்மீது
பனிமழை பெய்கிறது
குளிர்,
சீனாவைச் சூழ்கிறது...
நீண்ட இரவில்
பனிபடர்ந்த சமவெளி நிலங்கள்
யுத்த நெருப்பினால்
அழிக்கப்பட்டன.
எண்ணற்ற உழைப்பாளிகள்
தாம் உணவூட்டிய தம் கால் நடைகளை
செழிப்பு நிறைந்த தம் வயல்களை
இழந்து
அவநம்பிக்கையின் அழுக்கு ஒழுங்கைகளில்
நெருங்கித் திரண்டனர்.
பசித்த நிலம் நடுங்கும் கரங்களை நீட்டியபடி
இருண்ட வானைப் பார்த்தபடி,
மீட்சிக்காய்
இரந்தது.
சீனாவின் துயரமும் வலியும்,
இப் பனியிரவு போல்
நீண்டு பரந்தது.
சீன நிலத்தின்மீது
பனிமழை பெய்கிறது
குளிர்,
சீனாவைச் சூழ்கிறது...
ஓ! சீனா,
விளக்கற்ற இவ் இரவில்,
எனது பலவீன வரிகள்
உனக்குச்
சிறு,
உயிர்ப்பினைத் தருமா?.
No comments:
Post a Comment